கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை முதல் : 1.4 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் :

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்து பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக குழந்தைகளுக்கு தேசிய வைட்டமின் ஏ சத்து குறைபாட்டு நோய்களை தடுக்கும் திட்டத்தின் கீழ் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நாளை (20-ம் தேதி) முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள சுமார் 1.4 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படவுள்ளன.

வைட்டமின் ஏ சத்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உடல், மனவளர்ச்சி மற்றும் புத்திக்கூர்மைக்கும் மிகவும் இன்றியமையாத நுண்சத்து ஆகும். மேலும், வைட்டமின் ஏ சத்து கண் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மிகவும் அவசியமான ஒன்றாகும். பக்கவிளைவுகள் ஏற்படாது.

இத்திரவம் அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களிலும் 6 முதல் 11 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மில்லியும், 12 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 2 மில்லியும் வழங்கப்படவுள்ளன

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கோவிந்தன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வெங்கடாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE