ஆலங்குளம் அருகே அரசுப் பள்ளியில் - காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கரோனா இல்லை : சுகாதாரத்துறையினர் தகவல்

By செய்திப்பிரிவு

ஆலங்குளம் அருகே அரசுப் பள்ளியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சளி மாதிரி ஆய்வு செய்யப்பட்டதில் யாருக்கும் கரோனா இல்லை என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தையில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இங்கு உடையாம்புளி, புதூர், நாலாங்குறிச்சி, செட்டிக்குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 450 பேர் படிக்கின்றனர்.

மாணவ, மாணவிகள் காலையில் பள்ளிக்கு வரும்போது, அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு இயல்பு நிலையில் இருந்தால் வகுப்புக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், கடந்த புதன்கிழமை முதல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் பலருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அடுத்தடுத்த நாட்களிலும் ஏராளமான மாணவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 156 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறும்போது, “காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் யாருக்கும் கரோனா தொற்று இல்லை. சாதாரண சளி மற்றும் குளிர் காய்ச்சலாக இருக்கலாம். அதிகமானோருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டதால், சுற்றுவட்டாரக் கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. அக்கிராமங்களில் குடிநீர் மாதிரியும் எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், டெங்கு, மலேரியா பரிசோதனைக்கும் மாதிரி அனுப்பப்பட்டுள்ளது” என்றனர்.

மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 156 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்