தி.மலை மாவட்டத்தில் இன்று 2-ம் கட்டமாக - 1,004 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் : ஆட்சியர் பா.முருகேஷ் தகவல்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,004 முகாம்களில் 2-ம் கட்ட சிறப்பு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று (19-ம் தேதி) நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தி.மலை மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற சிறப்பு முகாமில் 1,04,325 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி, 19-ம் தேதி (இன்று) 2-ம் கட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதற்காக, 1,004 முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. கரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசியாகும்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இயலும். எனவே, 18 வயதுக்கு மேற்பட்டோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத் தில் 1,18,750 பேர் 2-வது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை. அரசு மேற்கொண்டுள்ள முயற்சிக்கு மக்கள் அனைவரும் உறுதுணையாக இருந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்ற நிலையை விரைவில் அடைய உதவிட வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை

பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மலை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் 19-ம் தேதி (இன்று) நடைபெற உள்ளது. தி.மலை மாவட்டத்தில் 100 சதவீத இலக்கை அடைய முன்னாள், இன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரநிதிகள், மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் அணி சார்ந்த நிர்வாகிகள் ஆகியோர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE