பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை சார்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளஆரம்ப சுகாதார நிலையங்களில் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு இரு வார விழிப்புணர்வு முகாம் நேற்று தொடங்கியது.
வரும் 30-ம் தேதி வரை நடைபெற உள்ள இம்முகாமை, கடம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ். உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரைகளை வழங்கினார்.
இந்நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் ஆட்சியர் தெரிவித்ததாவது:
வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு இரு வார விழிப்புணர்வு முகாமில், வயிற்றுப்போக்கால் ஏற்படும் நீரிழப்பை தடுக்கும் பொருட்டு 5 வயது வரையுள்ள 2,46,563 குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ். உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
இதற்காக 2,91,773 ஓ.ஆர்.எஸ்.உப்பு சர்க்கரை கரைசல் பாக்கெட்டுகள், 2,46,000 துத்தநாக மாத்திரைகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இருப்பில் உள்ளன.
இம்முகாம்களில் 1,741 அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரத் துறையைச் சார்ந்த 632 பணியாளர்கள் என 2,373 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தாய்பால் கொடுப்பதன் மூலம் வயிற்றுப்போக்கு ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்வில், திருவள்ளூர் சுகாதார மாவட்ட துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) ஜவஹர்லால், கடம்பத்தூர் ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, சுகாதாரத் துறை மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago