வன்னிய சமுதாயத்தினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கக் கோரி வன்னியர் சங்கம் சார்பில் கடந்த 1987 செப்.17-ம் தேதி மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர்.
இதையொட்டி ஆண்டுதோறும் செப்.17-ம் தேதியை இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகளின் நினைவு தினமாக பாமகவினர் கடைபிடித்து வருகின்றனர்.
திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க தலைமை அலுவலகத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறும் நிகழ்வில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் சங்கத் தலைவர் அன்புமணி ராமதாஸ், மாநிலத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளின் உருவப்படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றி, மலர்த் தூவி அஞ்சலி செலுத்துவர்.
தொடர்ந்து அவர்கள் சித்தனி, பாப்பனப்பட்டு, முண்டியம்பாக்கம், பனையபுரம், கோலியனூர் மற்றும் கடலூர் மாவட்டம் கொள்ளுக்காரன்குட்டை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தியாகிகள் நினைவுத் தூண்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்துவது வழக்கம். கடந்த ஆண்டு கரோனா தொற்றால் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த இவ்விடங்களுக்கு வரவில்லை. அப்போது, இந்நிகழ்ச்சிகள், அவர்கள் பங்கேற்ற நினைவஞ்சலி நிகழ்வு, ஜூம் செயலி மூலம் பதிவு செய்யப்பட்டு, கட்சித் தொண்டர்கள் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நேற்று நடைபெற்ற 34 -வது தியாகிகள் நினைவு தினத்திலும் ராமதாஸ், அன்புமணி, ஜி.கே.மணி பங்கேற்கவில்லை.
இதனால் பாமக தொண்டர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து பாமக தலைமை நிலைய நிர்வாகிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:
கரோனா 3-வது அலை ஏற்பட வாய்ப்பு உ ள்ளதாலும், தற்போது தமிழக அளவில் கரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருவதாலும் பாமக தொண்டர்கள் அதிக அளவில் குவிய வாய்ப்பு உள்ளதால், ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. ஆனால், அவரவர் வீடுகளில் தியாகிகள் உருவப் படத்துக்குகு அஞ்சலி செலுத்தினர்.இதையொட்டிதான் கடந்த 15-ம் தேதி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் ”அனைவரும் அவரவர் வீட்டின் முன்பு இடஒதுக்கீட்டு தியாகிகளுக்கு வீரவணக்கம் என்ற பதாகையை அமைத்து, அவர்களை நினைவு கூறவேண்டும் என்று தெரிவித்தார்” என்றனர்.
ராமதாஸ், அன்புமணி, பங்கேற்கவில்லை. பாமக தொண்டர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago