தொழிலாளர்களை கொத்தடிமை முறையில் பணி அமர்த்தினால் சிறை : நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

குழந்தைத் தொழிலாளர்களை கொத்தடிமை முறையில் பணி அமர்த்தினால், வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்படும் என நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில், தொழிலாளர்கள் கொத்தடிமைத் தொழிலாளர்களாக நடத்தப்படுவதாக அதிக அளவிலான புகார்கள் வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டதில், இந்த மாதத்தில் மட்டும் 8 தொழிலாளர்கள், கொத்தடிமைத் தொழில் முறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆய்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும்.

இது தொடர்பாக பெறப்படும் புகார் உறுதி செய்யப்பட்டால், குறிப்பிட்ட நிறுவன உரிமையாளர் மீது, கொத்தடிமை தொழிலாளர் முறை (ஒழிப்பு) சட்டத்தின்படி, 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், இப்பணிக்கு பெரியவர்களை அழைத்து வரும் உரிமையாளருக்கு 7 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை சிறை தண்டனையும், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை இப்பணிக்கு அழைத்து வரும் உரிமையாளருக்கு வாழ்நாள் சிறை தண்டனையும் வழங்க வழிவகை உள்ளது.

எனவே, தொழில் நடத்துபவர்கள், முன்பணம் கொடுத்து தொழிலாளர்களை கொத்தடிமை தொழிலாளர்களாக நடத்துவதை தவிர்க்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE