நாளை நடைபெறும் சிறப்பு முகாமில் - 100% மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு : ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (19-ம் தேதி) நடைபெறும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில், 100 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (19-ம் தேதி) இரண்டாம் கட்ட சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடக்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் எச். கிருஷ்ணன் உண்ணி பேசியதாவது:

கடந்த வாரம் நடந்த முதல்கட்ட கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில், 97 ஆயிரத்து 198 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் நாள்தோறும் கரோனா பாதிப்பு ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. கரோனா பாதிப்பை முழுமையாகக் கட்டுப்படுத்த நிரந்தர தீர்வு அனைத்து பொதுமக்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதே ஆகும். 100 சதவீத மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதே அரசின் நோக்கம் ஆகும்.

இந்த நோக்கத்தை அடையும் வகையில், மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் சிறப்பு முகாம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். இரண்டாம் கட்ட தடுப்பூசி முகாமில், 100 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

548 மையங்களில் தடுப்பூசி

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உட்பட 548 மையங்களில், காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணையாக கரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட உள்ளது. தடுப்பூசி தேவைப்படும் இடங்களில் உடனடியாக மாற்று இடங்களில் இருந்து தடுப்பூசிகள் அனுப்பி வைக்க வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.முருகேசன், மாநகராட்சி ஆணையர் மா.இளங்கோவன், சுகாதாரத்துறை இணை இயக்குநர் கோமதி, துணை இயக்குநர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஈரோடு மாநகராட்சியில் ஒரு வார்டுக்கு ஒரு மையம் என 60 மையங்களும், கூடுதலாக 4 சிறப்பு மையங்களிலும் நாளை தடுப்பூசி போடப்படும் என மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்