அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் ஆகியவை இணைந்து திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.பழனிசாமி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கணேசன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநகர் மாவட்டச் செயலாளர் வினோத் மணி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.சூர்யா ஆகியோர் தலைமை வகித்தனர்.
தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தில் சாதி ரீதியாக வேலையும், கூலியும் வழங்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அனைத்து நாட்களும் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் சட்டக் கூலி ரூ.273-ஐ குறைக்காமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன், மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா,இந்திய கம்யூனிஸ்ட் புறநகர் மாவட்டச் செயலாளர் த.இந்திரஜித், மாநகர் மாவட்டச் செயலாளர் ஏ.கே.திராவிடமணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான ஏ.லாசர் பேசியது:
100 நாள் வேலைத் திட்டத்துக்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதை தடுக்கும் நோக்கில், பெரு நிறுவன முதலாளிகள் பிரதமருக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். எனவே, சாதிய அடிப்படையில் வேலை மற்றும் கூலியை வழங்குவதன் மூலம் தொழிலாளர்களிடையே பிரிவினையைஏற்படுத்தி, தொழிலாளர்களிடம் ஒற்றுமை இல்லை என்று வெளிக்காட்டி இந்தத் திட்டத்தை அழிக்க மத்திய அரசு திட்டமிடுகிறது என்றார்.
புதுக்கோட்டையில்...
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் கே.சண்முகம் தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் கே.அமிர்தலிங்கம், மாநில பொருளாளர் எஸ்.சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago