தமிழகத்திலேயே முதல்முறையாக ரூ.13.50 லட்சம் மதிப்பில் சூரிய சக்தியில் இயங்கும் பயணிகள் நிழற்கூடம் கிருஷ்ணகிரியில் அமைக்கப்பட்டுள்ளது என எம்பி செல்லக்குமார் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகில் சேலம் சாலையில் பயணிகள் நிழற்கூடம் இல்லாமல் இருந்தது. இதனால், பொதுமக்கள் வெயில் மற்றும் மழை நேரங்களில் திறந்தவெளியில் பேருந்துக்கு காத்திருந்தனர். இதனால், சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.
இதையடுத்து, இங்கு பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் அதிநவீன சூரிய சக்தியில் இயங்கும் மேம்படுத்தப்பட்ட புதிய பேருந்து நிறுத்த பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டது.
நிழற்கூடத்தை மக்கள் பயன் பாட்டுக்கு நேற்று எம்பி செல்லக்குமார் தொடங்கிவைத்து கூறியதாவது:
இங்கு அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தியில் இயங்கும் நிழற்கூடம் தமிழகத்தின் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட நிழற்கூடமாகும்.
சூரிய சக்தியில் கிடைக்கும் மின்சாரத்தை கொண்டு இரவு முழுவதும் ஒளி அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், கண்காணிப்பு கேமராவும் இணைக்கப்பட்டுள்ளதால் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பயணிகளின் தகவலுக்காக டிஎஸ்பிலே போர்டு, எல்இடி டிவி நிறுவப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்றால், நிழற்கூடத்தை அப்படியே கழற்றி, வேறு இடத்தில் நிறுவிக் கொள்ள முடியும்.
இதனால், பணவிரயம் தவிர்க்கப்படுகிறது. மழைநீர் வடிகால் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ளதுபோல அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்ட முன்மாதிரியான நிழற்கூடம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் தரன், அகசிப்பள்ளி ஊராட்சித் தலைவர் நாராயணன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட தலைவர் ஜேசுதுரைராஜ், நகர தலைவர் வின்சென்ட், சேவாதளம் நாகராஜ், லலித்ஆண்டனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago