புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் செப்.27-ம் தேதி நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு, தமிழக அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தஞ்சாவூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இச்சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற மறுத்து வருவதுடன், போராட்டத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இச்சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது வரவேற்புக்குரியது.
இச்சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி செப்.27-ம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்துக்கு தமிழக அரசு முழு ஆதரவு அளிக்க வேண்டும். இப்போராட்டத்துக்கு வணிகர்களும் ஆதரவு தெரிவித்து கடையடைப்பு செய்ய வேண்டும்.
குறுவை அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. காரீப் பருவ நெல் கொள்முதல் அக்.1-ம் தேதி தொடங்க உள்ளதால், 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும். இதற்கான அனுமதியை மத்திய அரசிடம் தமிழக அரசுப் பெற வேண்டும் என தெரிவித்தார்.
சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.மணி, வடக்கு மாவட்டத் தலைவர் செந்தில்குமார், மாநகரச் செயலாளர் அறிவு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago