தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்கள், 13 மாவட்ட கவுன்சிலர்கள், 127 ஒன்றிய கவுன்சிலர்கள், 288 கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவி மற்றும் 2,220 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான மாவட்டம் முழுவதும் 1,410 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடி மையங்களில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். ஆற்காடு, நெமிலி, பாணாவரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அவர் ஆய்வு செய்து ஒரு சில வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கூறும்போது, ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் 356 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.அதேநேரத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க மாவட்ட முழுவதும்9 பறக்கும் படைகள் அமைக்கப் பட்டு சுழற்சி முறையில் கண்காணிக்க உத்தரவிடப் பட்டுள்ளது’’என்றார்.
அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபாசத்யன், வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சித்துறையினர் உட்பட பலர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago