சிதம்பரம் அருகே பழையநல்லூரில் முதலை கடித்து உயிரிழந்தவர் குடும்பத்துக்கு வனத்துறை சார்பில் நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டது.
சிதம்பரம் அருகே உள்ள பழையநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(65). விவசாயி. இவர் திமுக கிளைக் கழக செயலாளராகவும் இருந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் ஊருக்கு அருகில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது முதலை ஒன்று அவரை கடித்து தண்ணீருக்குள் இழுத்து சென்றது. பழைய கொள்ளிடத்தில் கோபாலகிருஷ்ணனின் உடலை வனத்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்ட வன அலுவலர் செல்வம் பழையநல்லூர் கிராமத்தில் உள்ள கோபாலகிருஷ்ணன் வீட்டிக்கு சென்றார். கோபாலகிருஷ்ணன்மனைவி கலாவதியிடம் முதல் கட்ட நிவாரண தொகையாக ரூ. 50 ஆயிரத்தை வழங்கினார். சிதம்பரம் வனச்சரக அலுவலர் செந்தில் குமார், வனவர் அஜிதா, வனக்காப்பாளர் அனுசுயா, சரளா, அமுதப்பிரியன், வனப்பணியாளர்கள் ஸ்டாலின், புஷ்பராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
கடந்த ஆண்டு கோபாலகிருஷ்ணனின் உறவினர் அறிவானந்தம் பழைய கொள்ளிடத்தில் குளித்த போது முதலை கடித்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் சிதம்பரம் அருகே கிள்ளையை அடுத்துள்ள பனங்காடு கிராமத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி(35)யை கடந்த 6-ம் தேதி அதே பகுதியில் உள்ள வாய்க்காலில் முகம் கழுவும் போது முதலை கடித்தது. குமாட்சி அருகே உள்ள தவர்த்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மாரியப்பன்(48) பழைய கொள்ளடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது முதலை கடித்தது.
இது போல சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டப்பகுதிகளில் முதலை பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில் முதலை பண்ணை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 15 ஆண்டாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் சிதம்பரம் வனத்துறையினர் சி.முட்லூர் அரசு கல்லூரி பின்புறம் உள்ள இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை முதலைப்பண்ணை அமைக்க பார்வையிட்டு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago