கிருஷ்ணகிரி மாவட்ட விவசாய நிலங்களில் - முதுமக்கள் தாழியை கண்டால் தகவல் அளிக்க காப்பாட்சியர் அறிவுறுத்தல் :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலத்தில் முதுமக்கள் தாழியை கண்டால், அதனை உடைத்துவிடாமல் அருங்காட்சியகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என காப்பாட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர்கோவிந்தராஜ் கூறும்போது, கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் இம்மாதம் சிறப்பு காட்சி பொருளாக 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழி தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாழியானது, கிருஷ்ணகிரி வட்டம் பீமாண்டப்பள்ளியில் கிடைத்தது.

இதனுள் இறந்த குழந்தை ஒன்றின் சில எலும்புகளை வைத்து புதைத்து, புதைவிடத்தில் பெரியகற்களை கொண்டு நினைவுச் சின்னம் எழுப்பியிருக்க வேண்டும். தற்போது அக்கற்கள் விவசாயத்திற்காக அப்புறப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

இத்தாழியின் காலத்தை பெருங்கற்படைக் காலம் எனக் குறிப்பிடுவர். சங்க இலக்கியங்கள் இதனை முதுமக்கள் தாழி எனக் குறிப்பிடுகின்றன. இரும்பின் பயன்பாட்டை மனிதன் முதன் முதலாகக் கண்டறிந்தகாலம் இது.

இக்காலமக்கள் உள்பக்கம் கருப்பும், வெளிப்பக்கம் சிவப்பு நிறத்தைக் கொண்ட மெல்லிய ஆனால் மிகவும் உறுதியான மண்பாண்டங்களை பயன்படுத்தியுள்ளனர். இறந்தவர்களின் நினைவாக பெரிய கற்களைக் கொண்டுகற்பதுக்கை, கல்திட்டை, குத்துக்கல், கல்வட்டம் என பலவகையான நினைவுச்சின்னங்களை எழுப்பியுள்ளனர். அதனுள் இத்தகைய தாழி அல்லது விலங்கு வடிவிலான சுடுமண் பெட்டி வைத்திருப்பர். பொதுவாக முதுமக்கள் தாழியானது, 4 அடி உயரத்தில் 2 அடி விட்டத்தில்இளஞ்சிப்பு நிறத்தில் மணல் கலந்து செய்யப்பட்டிருக்கும். அதன் அடிப்பகுதி கூம்புபோல் இருக்கும். இது பெண்களின் கர்ப்பபையை போல உருவகப்படுத்துவதாகும்.

இறந்தவர்கள் மீண்டும் கர்ப்பப் பைக்குள் சென்று மறுப்பிறப்பு எடுப்பதாகக் கருதும் அக்கால மக்களின் நம்பிக்கையை இது வெளிப்படுத்துகிறது. எனவே, இத்தகைய முதுமக்கள் தாழியை நிலத்தில் பொது மக்கள் கண்டால், அதனை உடைத்துவிடாமல் அருங்காட்சியகத்துக்குத் நேரடியாகவோ அல்லது 94434 42991 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்