இங்கிலாந்தில் வேலை வாங்கித் தருவதாக இளைஞரிடம் ரூ.10.50 லட்சம் மோசடி செய்ததாக 4 பேர் மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் கீழத் தெருவை சேர்ந்தவர் ஜீவா (35). டிரைவரான இவர் முகநூலில் சரோன் மோர்கன் என்பவருடன் நண்பராக பழகி வந்துள்ளார். மோர்கன் இங்கிலாந்தில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். ஜீவா வேலை இல்லாமல் இருப்பதாக தெரிவித்தையடுத்து, இங்கிலாந்தில் அவருக்கு வேலை வாங்கி தருவதாக மோர்கன் உறுதி அளித்துள்ளார்.
பின்னர் விசா பெறுவதற்காக ரூ.10 லட்சத்து 50 ஆயிரத்து 100 தேவைப்படுவதாகவும், பணத்தை சாஷித் அலி, ஆரிப்கான், அமித்குமார், ராஜாபாபு ஆகியோரது வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய ஜீவா பணத்தை 4 பேரின் வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. மீண்டும் மோர்கனை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜீவா தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீஸில் புகார் தெரிவித்தார்.
அதன்பேரில் 4 பேர் மீதும் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago