சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் :

தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி மாப்பிளையூரணியில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் முன்பு கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவர்செ.பொன்சாந்தகுமாரி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பெ.மகேஸ்வரி, மாவட்ட அமைப்புச் செயலாளர் எஸ்.மகாலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அளித்த மனு விவரம்:

கரோனா தடுப்பூசி மருந்தை எடுப்பதற்கும், மீதமுள்ளதை வைப்பதற்கும் கிராம சுகாதார செவிலியர்கள் தினமும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்வதால் அலைச்சல், நேரம் மற்றும் பண விரயம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க கரோனா தடுப்பூசியை வாகனம் மூலம் அளித்து, திரும்பப் பெற ஏற்பாடு செய்ய வேண்டும்.

தாய், சேய் நலப்பணிகள் இருப்பதால் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்களும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு கரோனா தடுப்பூசி பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கரோனா தடுப்பூசி பதிவு, தடுப்பூசி போட வேண்டியவர்களின் பட்டியல் தயாரிப்பு, அவர்களை அழைத்து வருதல் போன்ற பணிகளில் சுய உதவிக் குழுவினர், ஆசிரியர்கள், உள்ளாட்சித் துறையைச் சேர்ந்த வர்களை ஈடுபடுத்த வேண்டும்.

கரோனா தடுப்பூசி போடும் இடங்களில் பல்வேறு பிரச்சினைகளை சந்திப்பதால் 3 பேர் கொண்ட குழுவாக பணியாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும். கிராம சுகாதார செவிலியர்கள் அனைவரும் பெண்கள் என்பதால் கரோனா தடுப்பூசி பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் இருக்க வேண்டும். மேலும் வாரம் ஒரு நாள் மற்றும் பண்டிகை தினங்களுக்கு அரசு விடுப்பு அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி

இதே கோரிக்கைளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர், மாநில பிரச்சார செயலாளர் ஜெகதா, மாவட்ட தலைவர் ஸ்டெல்லா, பொருளாளர் அஜிதா உள்ளிட்ட செவிலியர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்