தூத்துக்குடி அருகே கந்து வட்டிக் கொடுமையால் மேளக் கலைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி அருகே உள்ள தட்டப்பாறை திம்மராஜபுரத்தை சேர்ந்தவர் பிரம்மராஜன் (60), மேளக்கலைஞர். இவர் நேற்று முன்தினம் இரவு கூட்டுடன்காடு குளக்கரையில் வைத்து விஷம் குடித்துள்ளார்.
பின்னர் தான் விஷம் குடித்த விவரத்தை நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.
உடனடியாக அங்கிருந்து தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தட்டப்பாறை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று தேடினர். அப்போது, அவர் வர்த்தகரெட்டிபட்டி மின்சார வாரிய அலுவலகம் அருகே மயங்கிய நிலையில்கிடந்துள்ளார்.. உடனடியாக அவரை போலீஸார் மீட்டுதூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்நேற்று உயிரிழந்தார்.
பிரம்மராஜனின் சட்டைப்பையில் இருந்த ஒரு கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அதில், வைகுண்டத்தை சேர்ந்த 3 பேரிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கி இருந்ததாகவும், வட்டியை கேட்டு அவர்கள் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பாக தட்டப்பாறை போலீஸார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்: பிரம்மராஜன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வைகுண்டத்தை சேர்ந்த 3 பேரிடம் ரூ.3.50 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதற்காக ரூ.10 லட்சம் வரை அவர் வட்டி செலுத்தியதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கரோனா ஊரடங்கால் வட்டியை அவரால் சரிவர செலுத்த முடியாதநிலையில் பணம் கொடுத்த 3 பேரும்வட்டியை கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர்.
இதில் மனம்உடைந்த பிரம்மராஜன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து தட்டப்பாறை போலீஸார் கந்து வட்டி வழக்கு பதிவு செய்து, வைகுண்டத்தை சேர்ந்த அருணாசலம் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தட்டப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago