ஆரணி நகரம் அண்ணா சிலை அருகே உள்ள பிரியாணி கடையில் கெட்டுபோன மீன், நண்டு மற்றும் இறைச்சிகளை வைத்திருந்த உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரம் காந்தி சாலையில் இயங்கி வந்த ஒரு பிரியாணி கடையில் அசைவ உணவு சாப்பிட்ட 10 வயது சிறுமி லோஷினி கடந்த 10-ம் தேதி உயிரிழந்தார். மேலும், சிறுமியின் தந்தை ஆனந்தன் உட்பட 40 பேர் பாதிக்கப்பட்டனர். இது குறித்து ஆரணி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரியாணி கடை உரிமையாளர் அஜ்மத் பாஷா, சமையலர் முனியாண்டி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, ஆரணி நகரம் முழுவதும் சைவ மற்றும் அசைவ உணவகங்களில் திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் 4-வது நாளாக நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, ஆரணி நகரம் அண்ணா சிலை அருகே உள்ள பிரியாணி கடையில் ஆய்வு செய்தபோது, கெட்டுப்போன மீன், நண்டு, ஆடு மற்றும் கோழி இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, கடையில் இருந்த 15 கிலோ இறைச்சி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். இது குறித்து கடை உரிமையாளர் சாதிக் பாஷா மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உணவு பாதுகாப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
17-ம் தேதி வரை ஆய்வு
இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் கூறும்போது, “இதுவரை 20 இறைச்சி கடைகளை ஆய்வு செய்துள்ளோம். 3 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, 15 கிலோ இறைச்சி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டுள்ளது. 16 உணவகங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.4 உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 35 கிலோ இறைச்சி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) நடத்தப்பட்ட ஆய்வில் கடை உரிமையாளர் சாதிக் பாஷா மீது வழக்குப்பதிவு செய் யப்பட்டுள்ளது. உரிமம் பெறாதவர்கள் விண்ணப்பித்தவுடன் உரிமம் வழங்கப்படும். இதுவரை 10 கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. வரும் 17-ம் தேதி வரை ஆய்வு பணி தொடரும்” என்றார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago