திருவண்ணாமலை மாவட்டத்தில் 30 நாட்களில் - 1,121 பண்ணை குட்டைகள் அமைத்து உலக சாதனை : ஆட்சியர், கூடுதல் ஆட்சியரிடம் சான்றிதழ் வழங்கல்

By செய்திப்பிரிவு

தி.மலை மாவட்டத்தில் 30 நாட்களில் 541 ஊராட்சிகளில் 1,121 பண்ணைக் குட்டைகள் அமைத்து உலக சாதனை படைக்கப்பட்டதற்கான சான்றிதழை ஆட்சியர் பா.முருகேஷ் மற்றும் கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

தி.மலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை மூலமாக 541 ஊராட்சிகளில் விவசாய நிலங்களில் ரூ.20 கோடியில் 1,121 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டன. ஒரு பண்ணைக் குட்டையில் 3.64 லட்சம் லிட்டர் மழைநீரை சேகரிக்க முடியும். இதன்மூலம் மொத்தமாக 40.69 கோடி லிட்டர் மழைநீரை தேக்கி வைத்து நிலத்தடி நீரை மேம்படுத்த உதவ வாய்ப்பு உள்ளது. கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி தொடங்கப்பட்ட பணி, கடந்த 10-ம் தேதி நிறைவு பெற்றுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களை கொண்டு பண்ணைக் குட்டை அமைக்கப்பட்டதாக ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, விவசாயிகளிடம் பண்ணைக் குட்டைகள் ஒப்படைக்கப்பட்டன. அதில் விவசாயிகள் விருப்பத்தின் பேரில் மீன்கள் வளர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

30 நாட்களில் 1,121 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டுள் ளதை, உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, எலைட் வேர்ல்ட் ரெக்கார்டு, ஏசியன் ரெக்கார்டு அகாடமி, இந்தியா ரெக்கார்டு அகாடமி, தமிழன் புக் ஆஃப் ரெக்கார்டு நிறுவன அதிகாரிகள் கடந்த 3 நாட்கள் ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள், தி.மலை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 30 நாட்களில் 1,121 பண்ணைக் குட்டைகள் உருவாக்கி உலக சாதனை படைக்கப்பட்டதற்கான சான்றிதழை ஆட்சியர் பா.முருகேஷ் மற்றும் கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோரிடம் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் அரசு துறை அதிகாரிகள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தின் மூலம் தண்ணீரில் தன்னிறைவு பெறும் என்பதால், மற்ற மாவட்டங்களுக்கு முன்னோடி மாவட்டமாக தி.மலை மாவட்டம் திகழ்ந்துள்ளதாக ஆட்சியர் பா.முருகேஷ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE