9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் - கூட்டணி குறித்து நிர்வாகிகள் முடிவு செய்வர் : பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி ரவி தகவல்

By செய்திப்பிரிவு

திருச்சியில் பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். தேசிய பொதுச் செயலாளரும், மாநில பொறுப்பாளருமான சி.டி.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா, முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்குப் பின் பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு செப்.17 முதல் அக்.7 வரை சேவா சமர்ப்பன் அபியான் பிரச்சாரம் நடைபெற உள்ளது. அப்போது மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளோம். திமுக அரசின் தேனிலவு காலம் முடிந்துவிட்டது. மக்களுக்கான நலத்திட்டங்களைவிட, ஆக்கப்பூர்வமான பணிகளைவிட மத்திய அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை மட்டுமே அதிகளவில் முன்னெடுக்கின்றனர். பிரதமர் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகின்றனர். கடந்த 4 மாதங்களாக தமிழகத்தை அபாயமான இடத்துக்கு கொண்டு சென்று வருகின்றனர். அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 700 கைதிகளை விடுதலை செய்யும் முடிவு தமிழகத்துக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே ஆபத்தான முடிவு. தேச விரோத செயல். இதை பாஜக எதிர்க்கும்.

நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பயனடைந்து வருவதை மறைத்து திமுகவினர் எதிர்மறை பிரச்சாரம் செய்கின்றனர். பாஜக அரசுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர். சிஏஏ சட்டம் குறித்து மக்களிடத்தில் தவறான புரிதலை ஏற்படுத்துகின்றனர். 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் பாஜக போட்டியிடும். கூட்டணியில் போட்டியிடுவதா? அல்லது தனித்து போட்டியிடுவதா என்பதை மாநில நிர்வாகிகள் முடிவு செய்வர். தமிழகத்தில் 4.70 லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அவற்றை மீட்கும் விவகாரத்தை பாஜக கையிலெடுக்கும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்