பாளேகுளி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு : இம்முறையாவது 28 ஏரிகள் நிரம்புமா என விவசாயிகள் எதிர்பார்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் பாளேகுளி ஏரியில் இருந்து நேற்று சந்தூர் வரை 28 ஏரி களுக்கு தண்ணீர் கால்வாயில் திறக்கப் பட்டது.

கிருஷ்ணகிரி அணை இடதுபுறக்கால்வாயின் கடைமடை ஏரியான பாளேகுளி ஏரியில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர், சென்றாம்பட்டி ஏரி, அரசமரத்து ஏரி, செல்லம்பட்டி ஏரி, நாகரசம்பட்டி ஏரி வழியாக சந்தூர் ஏரி உள்ளிட்ட 28 ஏரி களுக்குச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடர் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி நீர்மட்டம் 50 அடியை கடந்துள்ளது.

இதனால், அணையில் இருந்து பாளேகுளி ஏரிக்கு தண்ணீர் செல்வதாலும், ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி கேஆர்பி அணை இடதுபுறகால்வாய் நீட்டிப்பு பாளேகுளி முதல் சந்தூர் வரை பயன்பெறுவோர் சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து பாளேகுளி முதல் சந்தூர் வரை உள்ள 28 ஏரிகளுக்கு பாளேகுளி ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பாரூர் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முருகேசன், சங்கத் தலைவர் சிவகுரு, விவசாயிகள் இளங்கோவன், ராமமூர்த்தி, தனவேல், சக்தி, பழனி, உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 28 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் கால்வாயை, அந்தந்த பகுதி விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் தூர்வாரி சுத்தப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது, கடந்த 2013-ம் ஆண்டு முதல் ஏரிகளுக்கு 9 முறை தண்ணீர் விடப்பட்டுள்ளது. கடந்த முறை சந்தூர் ஏரியில் இருந்து ஒவ்வொரு ஏரிக்கும் தண்ணீர் விடப்பட்டது.

தற்போது சூழற்சி முறையில் சென்றாம்பட்டி ஏரியில் இருந்து ஒவ்வொரு ஏரிக்கும் தண்ணீர் விடப்படுகிறது. இதுவரை ஒரு முறை கூட 28 ஏரிகள் நிரம்பவில்லை. தற்போது 28 ஏரிகளிலும் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் கால்வாயை ஆழம் மற்றும் அகலப்படுத்திட வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்