தூத்துக்குடி மாவட்டத்தில் 40% விவசாயிகளுக்கு - வெள்ள நிவாரண நிதி கிடைக்கவில்லை : ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் புகார்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் 40 சதவீத விவசாயிகளுக்கு வெள்ளநிவாரண நிதி இதுவரை கிடைக்கவில்லை என்று தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

கடந்த 2020-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மழை அதிகமாக பெய்ததால் பயிர்கள் அனைத்தும் மூழ்கி அழுகி சேதமடைந்துவிட்டன. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4,000 இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் 40 சதவீத விவசாயிகளுக்கு வெள்ள நிவாரண நிதி இன்னும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக விவசாயிகள் தரப்பில் பலமுறை மனு கொடுத்தும் எந்த பதிலும் இல்லை. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக வெள்ள நிவாரண நிதியைவழங்க வேண்டும். மேலும், பயிர்காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் எந்தவித குளறுபடியும் இல்லாமல் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதி சான்றிதழ்

விளாத்திகுளம் வாதிரியார் ராஜகுல மகளிர் சமுதாய நலச்சங்க செயலாளர் மாலினி தலைமையில் அச்சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்: வாதிரியார் சமுதாயத்தை சேர்ந்த எங்களுக்கு படிப்பு சம்பந்தமாக சாதி சான்றிதழ் தேவையாக உள்ளது. எனவே, கல்வித்துறையில் மாற்றுச் சான்றிதழிலும், வட்டாட்சியர் அலுவலகத்தில் சாதி சான்றிதழிலும் தற்காலிகாக வாதிரியார் என்று சாதி சான்று கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோல் தமிழ்நாடு சோழகுல வாதிரி ராசாக்கள் சமுதாய சங்கம் சார்பில் அளித்த மனுவில், ‘தேவேந்திர குல வேளாளர் பிரிவில் இருந்து வாதிரியார் சமுதாயத்தை விடுவிக்க வேண்டும். வாதிரியார் சமுதாயத்தினருக்கு தேவேந்திர குல வேளாளர் என்று சாதி சான்றிதழ் வழங்குவதை ரத்து செய்ய வேண்டும். வாதிரியார் பெயரில் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

100 நாள் வேலை திட்டம்

வைகுண்டம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், ‘புதுப்பட்டியில் சுமார் 200 பேர் உள்ளோம். இதில் சிலருக்கு மட்டுமே எங்கள் ஊரில் 100 நாள் வேலை கிடைக்கிறது. மற்றவர்களை வெளியூருக்கு செல்ல வலியுறுத்துகிறார்கள். எங்கள் கிராமத்தில் பல பணிகள்நிலுவையில் உள்ளன. எனவே, எங்கள் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் எங்கள் ஊரிலேயே 100 நாட்கள் வேலை தருமாறு கேட்டுக் கொள்கிறோம்’ எனக் கூறப்பட்டிருந்தது.

விஷவண்டுகள் தொல்லை

அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் ஏ.சந்தனம் அளித்த மனுவில், ‘தூத்துக்குடி 3-வது மைலில் உள்ள இந்திய உணவுக் கழகத்துக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் கெட்டுப்போன உணவுதானியங்களில் இருந்து உற்பத்தியாகும் விஷவண்டுகள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளான பசும்பொன் நகர், ஆசீர்வாத நகர், முத்துநகர் பகுதிகளில் பரவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்களில் விழுந்தும், கடித்தும் வருகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ .

கண்டீசுவரர் ஆலயம்

தூத்துக்குடி சிவ பாரத இந்து மக்கள் இயக்க நிறுவனர் பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், ‘வல்லநாடு அருகே உள்ள நாணல்காடு கிராமத்தில் சிவகாமி அம்பாள் உடனுறை கண்டீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. 800 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின் பின்புறம் தாமிரபரணி ஆறு தட்சிண கங்கையாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோயிலை புனரமைப்பு செய்து சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்