தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் - 11.66 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம் :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் 11.66 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் விநியோகம் செய்யும் பணியை ஆட்சியர்கள் தொடங்கி வைத்தனர்.

தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா பெண்கள்மேல்நிலைப்பள்ளியில் மாணவியருக்கு குடற்புழு மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் மாணவியருக்கு அல்பெண்டசோல் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் குடற்புழு நீக்க முகாம் முதல் சுற்று 13.09.2021 முதல் 18.09.2021 வரையும், இரண்டாம் சுற்று 20.09.2021 முதல் 25.09.2021 வரையும், விடுபட்டவர்களுக்கான சுற்று27.09.2021 அன்றும் நடைபெற உள்ளது. ஒரு வயது முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், 20 வயது முதல் 30 வயதுடைய தாய்மார்களுக்கும் (கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது.

குடற்புழு நீக்க மாத்திரை கொடுப்பதன் மூலம் குடலில் உள்ள புழு தொற்று நீங்குவதுடன் ரத்தசோகை ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் குடற்புழு தாக்கத்தினால் ஏற்படக்கூடிய வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, சோர்வு மற்றும்படிப்பில் ஆர்வமின்மை ஆகியவை தடுக்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 4,58,495 குழந்தைகளுக்கும், 1,07,819 தாய்மார்களுக்கும் அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்பட உள்ளது. இந்த முகாம் 1,583 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 119 தனியார் பள்ளிகள் மற்றும் 1,477 அங்கன்வடி மையங்களில் நடைபெற உள்ளது என்றார்.

நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் சாரு முன்னிலை வகித்தார். சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பாலதண்டாயுதபாணி, சுப்பையா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாந்தினி கவுசல்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில், நாகர்கோவில் கவிமணி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியைத் தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் கூறியதாவது:

செப்டம்பர் 13 முதல் 25-ம் தேதி வரை திங்கள், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரையுள்ள குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் மற்றும் 20 முதல் 30 வயதுவரையுள்ள பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும்.

கைகழுவுதல், கழிப்பறைகளை பயன்படுத்துதல் மற்றும் தன்சுத்தம் பேணுதல் ஆகியவற்றை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். மாவட்டத்தில் குழந்தைகள் 5,81,817 பேர், 20 முதல் 30 வயது வரையுள்ள பெண்கள் 73,038 பேர் என, மொத்தம் 6.5 லட்சம் பேர் வரை பயனடைவார்கள். மாத்திரை உட்கொள்ளாத குழந்தைகள், மற்றும் பெண்களுக்கு வரும்27-ம் தேதி மாத்திரை வழங்கப்படும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மீனாட்சி மற்றும்அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்