ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட் டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை பலப் படுத்தவும், வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க வேண்டும் என ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்தார்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 6-ம் தேதி முதற்கட்ட தேர்தலும், அக்டோபர் 9-ம் தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, 9 மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று மாலை முதல் அமலுக்கு வந்தன.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆட்சியர் அமர் குஷ்வாஹா பேசும்போது, ‘‘உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளன. திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை மற்றும் நாட்றாம்பள்ளி ஆகிய ஒன்றியங்களில் அடுத்த மாதம் 6-ம் தேதியும், மாதனூர் மற்றும் ஆலங்காயம் ஒன்றியத்தில் 9-ம் தேதியும் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள தால் திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்த வேண்டும். மாவட்ட எல்லைப் பகுதியில் சோதனைச்சாவடி அமைத்து 24 மணி நேரம் கண்காணிப்பு தீவிரப்படுத்த வேண்டும். மேலும் நகர் பகுதியிலும் சோதனைச்சாவடி அமைத்துக்கொள்ளலாம்.
வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படையினர் கண்காணித்து தடுக்க வேண்டும். அதேபோல, வார்டு உறுப்பினர்களுக்கான இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை தேர்தல் அலுவலர்கள் பின்பற்ற வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள், குறைதீர்வுக் கூட்டம், அரசு விழாக்கள் நடத்த அனுமதி யில்லை’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை, திட்ட இயக்குநர் செல்வராசு, மகளிர் திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, துணை ஆட்சியர் பானுமதி, வேளாண் இணை இயக்குநர் ராஜசேகர், அனைத்து வட்டாட்சியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago