தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் - திருப்பூர், நீலகிரியில் 1,495 வழக்குகளுக்கு உடனடி தீர்வு :

By செய்திப்பிரிவு

திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 1,495 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டன.

திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற அமர்வுக்கு, மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருமான சொர்ணம் ஜெ.நடராஜன் தலைமை வகித்தார். குடும்ப நல நீதிமன்ற நீதிபதி வி.பி.சுகந்தி, மோட்டார் வாகன இழப்பீடு நீதிமன்ற நீதிபதி நாகராஜன் முன்னிலை வகித்தனர். 543 மோட்டார் வாகன விபத்து வழக்குகள், 206 சிவில் வழக்குகள், 19 காசோலை மோசடி வழக்குகள், 3 குடும்ப நல வழக்குகள், 7 வங்கி ரொக்க கடன் வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டன.

திருப்பூரை சேர்ந்த காவலர் விஜயகார்த்திக் சென்னையில் பணியாற்றியபோது, விபத்தில்உயிரிழந்தார். அவரது குடும்பத்தாருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.60 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

அரவிந்த் என்ற இளைஞர், கடந்த 2017-ம் ஆண்டு, இருசக்கரவாகனமும், பொக்லைனும் மோதிக்கொண்டதில், கை, கால்கள்செயலிழந்து வாய்பேச முடியாமல்பாதிக்கப்பட்டார். இது தொடர்பானவழக்கில், காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து நேற்று ரூ.47 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும், மொத்தம் 1,403 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, 813 வழக்குகளுக்கு ரூ.36 கோடியே 78 லட்சத்து 82 ஆயிரத்து 474 தொகைக்கு தீர்வு காணப்பட்டன.

நீலகிரி

நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா தலைமையில் லோக் அதாலத் நடைபெற்றது. நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி தரன், தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி குலசேகரன், சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி தர் ஆகியோர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளுக்கு சமரச தீர்வு கண்டனர்.

கோத்தகிரி நீதிமன்றத்தில் உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நீதிபதி ஜெயபிரகாஷ், குன்னூர் நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி லிங்கம், கூடலூர் நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி வெங்கட சுப்பிரமணியம், பந்தலூர் நீதிமன்றத்தில் கூடுதல் உரிமையியல் நீதிபதி பிரகாசம் ஆகியோர் தலைமையில் லோக் அதாலத் நடைபெற்றது.

வங்கி வாராக்கடன் வழக்கு களில் 118 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 34-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கும், நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த 964 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 648 வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டன. மொத்தம்1,082 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 682 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்