கோவை, திருப்பூரில் நடைபெற்ற நீட் தேர்வில் 415 பேர் ‘ஆப்சென்ட்' :

By செய்திப்பிரிவு

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற நீட் தேர்வை, 415 மாணவர்கள் எழுதவில்லை.

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கி,மாலை 5 மணி வரை நடைபெற்றது. அதன்படி, கோவையில் குரும்பபாளையம் ஆதித்யா தொழில்நுட்பக் கல்லூரி, சூலூர் ஆர்.வி.எஸ். கலை,அறிவியல் கல்லூரி,  கிருஷ்ணா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி, கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி, மேட்டுப்பாளையம்  சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி, கற்பகம் உயர்கல்வி நிறுவனம், நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 7 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

மொத்தம் 6,059 மாணவர்கள் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். ஒரே நேரத்தில் பலரும் கூடுவதைத் தவிர்க்க, காலை 11 மணி முதல் தேர்வு மையத்துக்குள் மாணவர்கள்அனுமதிக்கப்பட்டனர். அதற்குமுன் உடல் வெப்பநிலை, ரத்தஆக்சிஜன் அளவு பரிசோதிக்கப்பட்டு, கைகளை கிருமி நாசினியால் சுத்தப்படுத்திய பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு அறையில் புகைப்படத்துடன் கூடிய ஹால் டிக்கெட், அரசு வழங்கிய அடையாள அட்டை ஆகியவற்றை கட்டாயம் உடன் வைத்திருப்பதுடன் கிருமிநாசினி மற்றும் தண்ணீர் பாட்டில் ஆகியவற்றைக் கொண்டு வர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அதேபோல தேர்வு மையத்துக்குள் மின்னணு பொருட்கள் கொண்டு செல்லவும், முழுக்கைசட்டை, ஷூ, ஷாக்ஸ், நகைகள் அணிந்து வரவும் அனுமதி மறுக்கப்பட்டது. அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதோடு, பறக்கும் படை அதிகாரிகளும் அவ்வப்போது தேர்வு மையங்களில் ஆய்வு செய்தனர். மாவட்டம்முழுவதும் நேற்று 5,778 பேர் தேர்வெழுதினர். 281 பேர் தேர்வெழுதவில்லை. நீட் தேர்வையொட்டி கோவை மாவட்டத்தின்பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேர்வு மையங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக்பள்ளியில் 480 பேர், சோளிபாளையம் லிட்டில் கிங்டம் பள்ளியில் 480 பேர், விஜயமங்கலம் சசூரி கல்லூரியில் 420 பேர், திருமுருகன் பூண்டி ஏ.வி.பி.கலை அறிவியல் கல்லூரியில் 420 பேர், டீ பப்ளிக் பள்ளியில் 420பேர், தாராபுரம் மகாராணி கலை அறிவியல் கல்லூரியில் 328 பேர், உடுமலை விசாலாட்சி மகளிர் கல்லூரியில் 480 பேர், வித்யாசாகர் இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் 960 பேர் என 7 தேர்வு மையங்களில் மொத்தம் 3,988 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். மாணவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. மாவட்டத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டவர்களில் 134 பேர் நேற்று தேர்வு எழுத வரவில்லை. மொத்தமாக 3,854 பேர் தேர்வு எழுதினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்