படைத்துறை ஆலைகளை கார்ப்பரேஷன்களாக்கும் முடிவு - ஊழியர்களிடம் நாளை கருத்து வாக்கெடுப்பு :

ஆவடி ஓசிஎஃப் அனைத்து சங்கங்களின் கூட்டு போராட்டக் குழு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் உள்ள படைத்துறை உடைத் தொழிற்சாலை (ஓசிஎஃப்) உள்ளிட்ட நாட்டின் 41 படைத்துறை தொழிற்சாலைகளை 7 கார்ப்பரேஷனாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதைக் கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தபோது, மத்திய அரசு அவசர சட்டத்தைப் பிரகடனப்படுத்தி வேலை நிறுத்தத்தை தடை செய்தது.

இந்நிலையில், ஐஎன்டிடபிள்யூஎஃப் என்ற சங்கம் கார்ப்பரேஷனுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்ததை, அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நாள்தோறும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

படைத்துறை தொழிற்சாலைகளில் அனைத்து ஊழியர்களும் ஒருமித்த கருத்தோடு கார்ப்பரேஷன் முடிவை எதிர்க்கிறார்கள். ஆனால், ஒரு சங்கத்தின் ஒரு சில தலைவர்கள் மட்டுமே ஆதரிக்கிறார்கள்.

இதை நிரூபிக்கும் வகையில், அரசே 41 தொழிற்சாலைகளிலும் ஊழியர்களின் கருத்தை அறிய கருத்துக் கேட்பு வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினோம். ஆனால், அதை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இதையடுத்து, கூட்டுப் போராட்டக் குழு சார்பில் அனைத்து ஊழியர்களிடமும் கருத்து கேட்பு வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த கருத்து கேட்பு வாக்கெடுப்பு நாளை (செப்.14) காலை 7.15 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. கார்ப்பரேஷனை எதிர்ப்பவர்கள் வெள்ளை நிற பெட்டியிலும், ஆதரிப்பவர்கள் கருப்பு பெட்டியிலும் வாக்குச் சீட்டை செலுத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE