சிறையில் ஆய்வு செய்தபோது - துப்பாக்கி காட்டி இன்ஸ்பெக்டரை மிரட்டிய காவலர் : பூந்தமல்லி போலீஸார் தீவிர விசாரணை

By செய்திப்பிரிவு

பூந்தமல்லி கிளை சிறையில் ஆய்வுக்காக வந்த இன்ஸ்பெக்டர், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் செல்போனில் பேசியதைக் கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த காவலர், துப்பாக்கியை காட்டி இன்ஸ்பெக்டரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் கிளைச் சிறைச்சாலை உள்ளது. இங்கு என்ஐஏ உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால், சிறை வளாகத்தைச் சுற்றி எப்போதும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு இருக்கும்.

இந்நிலையில், நேற்று காலை கோவிந்தன் என்ற காவலர் துப்பாக்கியுடன் சிறை வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, இன்ஸ்பெக்டர் சுரேந்தர் நாயர் சிறையில் ஆய்வு செய்வதற்காக வந்தார். அப்போது, காவலர் கோவிந்தன் தனது செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

எனவே, இன்ஸ்பெக்டர் சுரேந்தர் காவலர் கோவிந்தனை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கோவிந்தன் தனது துப்பாக்கியை எடுத்து இன்ஸ்பெக்டர் சுரேந்தரை நோக்கிக் காட்டி கொன்று விடுவதாக மிரட்டினார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற போலீஸார் கோவிந்தனை சமாதானம் செய்தனர்.

இது தொடர்பாக, இன்ஸ்பெக்டர் சுரேந்தர் அளித்த புகாரின்பேரில், பூந்தமல்லி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், காவலர் கோவிந்தனின் மனநிலை குறித்து ஆய்வு செய்வதற்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல போலீஸார் தீர்மானித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்