விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1,067 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
18 வயது நிரம்பியோர் ஒரு லட்சம் பேரை இலக்காகக் கொண்டு விருதுநகர் மாவட்டம் முழுவதும் நேற்று கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
விருதுநகர் தேசபந்து திடலில் கரோனா தடுப்பூசி முகாமை சீனிவாசன் எம்.எல்.ஏ. முன்னிலையில் ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார்.
பின்னர் விருதுநகர் அல்லம்பட்டி சவுடாம்பிகை தொடக்கப் பள்ளி, ராவ் பகதூர் நடுநிலைப் பள்ளி, சூலக்கரை ஸ்டாண்டர்டு நர்சரி பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை சென்னை சிப்காட் மேலாண்மை இயக்குநரும் விருதுநகர் மாவட்ட கரோனா தடுப்பூசி முகாம் சிறப்பு அலுவலருமான டி.ஆனந்த், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பார்வையிட்டனர்.
சிவகாசியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை அசோகன் எம்எல்ஏ, ராஜபாளையம், செட்டியார்பட்டியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை தங்கப்பாண்டியன் எம்எல்ஏ ஆகியோர் பார்வையிட்டனர்.
ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, விருதுநகர் தேசபந்து திடல் அருகே உள்ள நகராட்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட சில பகுதிகளில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் 75,643 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை கரோனா கணிப்பாய்வு அலுவலர் எல்.நிர்மல் ராஜ், ராமநாதபுரம் ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா ஆகியோர் பார்வையிட்டனர்.
அப்போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கே.ஜே.பிரவீன்குமார், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர், சுகாதார துணை இயக்குநர் குமரகுருபரன் உட்பட பலர் உடன் இருந்தனர். பின்னர் ஆட்சியர் சந்திரகலா கூறும்போது, இனிமேல் ஞாயிற்றுக்கிழமை தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்றார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 1,225 மையங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. திண்டுக்கல் நகரில் முதல் தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்கள், இரண்டாவது தவணையாக நேற்று கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்களுக்கு வந்தனர். இவர்களுக்கு கோவேக்சின் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப் பட்டதையடுத்து தடுப்பூசி செலுத்தாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
பழநி நகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த சிறப்பு முகாமில் கோவேக் சின் தடுப்பூசி 20, கோவிஷீல்டு தடுப்பூசி 20 எனமொத்தம் 40 தடுப்பூசிகள் மட்டுமே வந்ததாகவும், இவற்றை செலுத்தி விட்டதால் தடுப்பூசி இல்லை என்று தடுப்பூசி செலுத்த வந்த மக்களிடம் தெரிவித்தனர்.
பழநி வட்டாரத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் போதுமான தடுப்பூசிகள் இல்லாததால் இதே நிலை நீடித்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago