தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர், குமரியில் விநாயகர் சிலைகள் நேற்று கடலில் கரைக்கப் பட்டன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யவும், விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் கரைக்கும் நிகழ்ச்சிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்யவும், அதனை தனி நபராகச் சென்று நீர் நிலைகளில் கரைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சுமார் ஒரு அடி உயர விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தனர். பல்வேறு இடங்களில் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 30 சிலைகள் மோட்டார் சைக்கிள் மூலம் சங்குமுக கடற்கரை பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு பக்தர்கள் விநாயகர் சிலைகளை கடலில் கரைத்தனர். நிகழ்ச்சியில் இந்து முன்னணி தூத்துக்குடி மாநகர் மாவட்டத் தலைவர் இசக்கிமுத்துகுமார், செயலாளர் ராகவேந்திரா, சிவலிங் கம், நாராயணராஜ் , மண்டல நிர்வாகிகள் சிபு, பலவேசம், நெல்லை பொறுப்பாளர்கள் பிரம்மநாயகம், சுடலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுபோல் சிவபாரத இந்து மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையிலும் விநாயகர் சிலைகள், தூத்துக்குடி கடலில் கரைக்கப்பட்டன.
திருச்செந்தூர்
திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், ஆழ்வார்திருநகரி கிழக்கு, மேற்கு மற்றும் கருங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 63 விநாயகர் சிலைகள் திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் கடற்கரைக்கு நேற்று மாலையில் கொண்டு வரப்பட்டு, கடலில் கரைக்கப்பட்டன.நிகழ்ச்சியில், இந்து முன்னணி நெல்லை கோட்டச் செயலாளர் பெ.சக்திவேலன், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தலைவர் வி.எஸ்.முருகேசன், மாவட்ட துணைத்தலைவர் கசமுத்து, மாவட்டச் செயலாளர் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி, திருச்செந்தூர் உதவி கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் ஆகியோர் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நாகர்கோவில்
நாகர்கோவிலில் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பினர் சார்பில் வீடுகள், கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாய கர் சிலைகள் மினி டெம்போ மற்றும் இருசக்கர வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டு ஒழுகினசேரி பழையாற்றில் கரைக்கப்பட்டன.இதைப்போல கன்னியாகுமரி, கொட்டாரம் பகுதிகளில் பூஜை செய்யப் பட்ட விநாயகர் சிலைகள் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. குழித்துறை நகராட்சி பகுதிகளில் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நேற்று 1,000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப் பட்டன. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago