தென்காசியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை : மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

By செய்திப்பிரிவு

“நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டுவரப்படும்" என்று, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதா வது:

உருமாறிய கரோனா வைரஸை கண்டறிய இந்தியாவில் 23 மரபணு ஆய்வகங்கள் உள்ளன. தமிழகத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் 10 பேருக்கு கண்டறியப்பட்டு, அதில் ஒருவர் இறந்துவிட்டார். 9 பேர் நலமாக உள்ளனர். இதுபோன்ற வைரஸை கண்டறிய பெங்களூருவுக்கு மாதிரியை அனுப்பி 3 மாதம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

எனவே, இந்தியாவிலேயே முதன்முறையாக மாநில அரசின் நிர்வாகத்தில் செயல்படும் மரபணு ஆய்வகம் சென்னையில் 4 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு திறக்கப்பட உள்ளது. நீட் தேர்வு குறித்து மாணவ, மாணவிகள் தேவையற்ற குழப்பம் அடைய வேண்டாம். மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்ட இடங்களில் மறுநாள் முகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். மெகா முகாம் மூலம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 கோடி பேருக்கு தடுப்பூசி என்ற நிலையை தமிழகம் எட்டும்.

9 மாவட்டங்களில் கண்காணிப்பு

கேரள எல்லையையொட்டி உள்ள கன்னியாகுமரி, தென்காசி, கோவை உட்பட 9 மாவட்டங்களை கண்காணிக்கவும், கேரளாவில் இருந்து வரும் மக்களால் தொற்று அதிகரிப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் கழிவுகளை கொண்டுவருவதை கண்காணிக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்.

தென்காசி, ராணிப்பேட்டை, பெரம்பலூர் மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தேவைப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அரசின் கவனத்துக்கு முதல்வர் கொண்டுசென்றுள்ளார்.

இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுவது வருத்தம் அளிக்கிறது. நீட் தேர்வு கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது. தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக தனி தீர்மானம் கொண்டுவர இருக்கிறார். அந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி போதுமான அழுத்தம் தரப்படும். முந்தைய ஆட்சிக்காலத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தை குடியரசுத் தலைவர் நிராகரித்தது போல இந்த முறை செய்ய முடியாது என்றார்.

தடுப்பூசி முகாமும்- இலக்கும்

தூத்துக்குடி மாவட்டத்தில் 74,230 பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கோடு, 805 இடங்களில் முகாம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் 951 இடங்களில் முகாம் நடைபெற்றது. 58 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் 651 இடங்களில் முகாம் நடைபெற்றது. 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 625 இடங்களில் முகாம் நடைபெற்றது. 65 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்