அரசு மருத்துவர்கள் உட்பட 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவிநாசி அரசு மருத்துவமனை 3 நாட்களுக்கு மூடப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அரசு மருத்துவமனையில் 6 மருத்துவர்கள், 25-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு கரோனா பரிசோதனை மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் 3 பேர், பணியாளர் ஒருவர் என மொத்தம் 4 பேருக்கு, கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவிநாசி அரசு மருத்துவமனை நேற்று முதல் 3 நாட்களுக்கு மூடப்பட்டது.
இதுதொடர்பாக, சுகாதார பணியாளர்கள் கூறும்போது, “மருத்துவமனையில் பணியாற்றும் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உள்நோயாளிகள் மற்றும் அறுவைசிகிச்சை நோயாளிகள் என அனைவரும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வரும் 15-ம் தேதி மருத்துவமனை திறக்கப்படும்” என்றனர்.
இதேபோல, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் 6 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, 3 நாட்கள் மருத்துவமனை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago