கிருஷ்ணகிரி அருகே - 3 குட்டிகளுடன் யானைகள் முகாம் : 30 ஏக்கரில் பயிர்கள் சேதம்; சானமாவில் ஒற்றை யானை

கிருஷ்ணகிரி அருகே 3 குட்டிகளுடன் சுற்றும் 8 யானைகள் விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால், 30 ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

தமிழக-ஆந்திர மாநில எல்லையோரம் உள்ள கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜாகடை அங்கனாமலை வனப்பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக 3 குட்டிகளுடன் 8 யானைகள் முகாமிட்டுள்ளன. இவை இரவு- நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறி மகாராஜாகடை மற்றும் அதன் சுற்று வட்டாரக் கிராமங்களில் உள்ள விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இதில், அப்பகுதியில் சுமார் 30 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழை, தக்காளி, தென்னை, நெல் வயல்களில் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது.

மாவட்ட நிர்வாகம் இதுதொடர்பாக வேளாண்மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் பயிர் சேதங்களை கணக்கீடு செய்து வனத்துறை மூலம் இழப்பீடு வழங்கவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

ஓசூர் வனத்துறை எச்சரிக்கை

ஓசூர் வனக்கோட்டம் வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கர்நாடக மாநிலத்தில் இருந்து வேப்பனப்பள்ளி காப்புக்காடு, சிகரலப்பள்ளி, நேரலகிரி ஐப்பிகானப்பள்ளி ஆகிய கிராமங்களின் வழியாக கரியானப்பள்ளி காப்புக் காட்டுக்குள் ஒற்றை யானை நேற்று முன்தினம் வந்தது.

தற்போது, சானமாவு காப்புக் காட்டில் முகாமிட்டுள்ள யானைஊருக்குள் புகாமல் தடுக்க ஓசூர் வனச்சரக அலுவலர் ரவி தலைமையில் 30 வனப்பணியாளர்களை கொண்ட 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், சானமாவையொட்டியுள்ள கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்கு தனியாக யாரும் காவலுக்கு செல்ல வேண்டாம்.

மேலும், ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, ஓசூர் - ராயக்கோட்டை நெடுஞ்சாலை, உத்தனப்பள்ளி - கெலமங்கலம் நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் கடக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் கடந்துசெல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE