தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கரோனா மெகா தடுப்பூசி முகாம் 805 இடங்களில் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுத்திடும் பொருட்டு அரசின் உத்தரவுப்படி இன்று (12-ம் தேதி) கரோனா மெகா தடுப்பூசி முகாம் நடத்தி, ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
805 இடங்களில் அந்தந்த பகுதியில் அமைந்துள்ள வாக்குச் சாவடிமையங்களில் காலை 7 மணி முதல்இரவு 7 மணி வரை இம்முகாம்நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள், வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்த 50 நடமாடும் மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள், காவல்துறையினர் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதால் அவர்களின் ஆதார் எண்களை சேகரித்துஇதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசிபோட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுய உதவி குழுக்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அந்தந்த பகுதியில்உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், தன்னார்வலர்கள் மூலம் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை மாற்ற ஒத்துழைப்பு தர வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.
3 பேருக்கு தங்கக்காசு
கோவில்பட்டி நகரப்பகுதியில் 33 இடங்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 69 இடங்கள் என மொத்தம் 102 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதில், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 3 பேருக்கு தங்கக்காசும், 5 பேருக்கு ஹெட் செட், 50 பேருக்கு சேலைகள், 20 பேருக்கு டி-சர்ட், 22 பேருக்கு ஹாட்பாக்ஸ் என மொத்தம் 100 பேருக்கு பரிசு வழங்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago