நூற்றாண்டு நினைவு தினம்: எட்டயபுரத்தில் பாரதியார் சிலைக்கு மரியாதை : அமைச்சர், எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அவர் பிறந்தஊரான எட்டயபுரத்தில் உள்ள மணிமண்டபம், நினைவு இல்லத்தில் பாரதியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி.மார்க்கண்டேயன் ஆகியோர் மணிமண்டபம் மற்றும்பாரதியார் இல்லத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எழுத்து, கவிதைகள் வழியாக நாட்டு விடுதலைக்கு உழைத்திட்ட பாரதியார் நினைவு தினம் செப்டம்பர் 11- ம் தேதி ஆண்டுதோறும் மகாகவி நாளாக அரசு சார்பில் கடைபிடிக்கப்படும் என்பது உட்பட 14 சிறப்பு அறிவிப்புகளை முதல்வர் அறிவித்துள்ளார். இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

நிகழ்ச்சியில் செய்தி மக்கள்தொடர்பு அலுவலர் சு.ஜெகவீரபாண்டியன், கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன், வட்டாட்சியர் அய்யப்பன், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் மற்றும் திமுக மாநிலபொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக தென்காசி தொகுதிஎம்.பி. தனுஷ்குமார், சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா ஆகியோர்மணிமண்படத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாணவர்கள் மரியாதை

கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை, ரோட்டரிகிளப் ஆப் ஏஞ்சல்ஸ், கொண்டைய ராஜு நினைவு ஓவியப் பயிற்சிபள்ளி சார்பில் எட்டயபுரத்தில் உள்ள பாரதி மணிமண்டபத்தில் மகாகவி தினம் கடைபிடிக்கப்பட்டது. கொண்டைய ராஜு நினைவு ஓவியப் பயிற்சி பள்ளி மாணவர்கள் பாரதியின் உருவப் படத்தை வரைந்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, பாரதியாரின் படத்துக்கு வண்ணம் தீட்டும் போட்டியில் மாணவர்கள் கலந்து கொண்டனர். எட்டயபுரம் தமிழ் பாப்திஸ்து பள்ளி மாணவர்கள் பாரதி போல் வேடம் அணிந்து வந்து, அவரது உருச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் ஆப் ஏஞ்சல்ஸ் தலைவர் ஹேமலதா தலைமை வகித்தார். கொண்டைய ராஜு ஓவியப் பயிற்சி பள்ளி நிர்வாகி பூபதி, ரோட்டரி மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு தலைவர் முத்துச்செல்வன், ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அமைச்சர் பி.கீதாஜீவன், எம்எல்ஏ ஜீ.வி.மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் பாரதியார் நினைவுஅறக்கட்டளை தலைவர் முத்துமுருகன், தமிழ் பாப்திஸ்து தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் லால்பகதூர் கென்னடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலியில் பாரதியார்நினைவு நூற்றாண்டு விழாவையொட்டி திமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன், தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டியன், காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய இணையமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ, பாஜக சார்பில் நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்டத் தலைவர் மகாராஜன், பாரதியார் உலக பொதுச்சேவை நிதிய தலைவர் அ.மரிய சூசை, பொது செயலாளர் கோ.கணபதி சுப்பிரமணியன், தமிழ்நாடு தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் இரா.செல்வமணி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதுபோல், மதிதா இந்து மேல்நிலைப்பள்ளியில் பாரதியார் பயின்ற வகுப்பறையிலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதிமுக மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் தேச ஒற்றுமை உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்