ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 15 குழந்தை திருமணங்களை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
கடந்த 9-ம் தேதி முதல் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு சுப முகூர்த்த தினம் என்பதால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தன.
இதில், திருமண வயதை அடையாத சிறுமிகளுக்கு திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட சமூக நலத்துறை, காவல் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, சமூக நலத்துறை அதிகாரிகள் காவல் துறையினருடன் இணைந்து 3 மாவட்டங்களிலும் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட ஆய்வில் 15 குழந்தைகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, பெற்றோர் மற்றும் உறுவினர்களை அழைத்து பேசி 15 குழந்தைகளின் திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பெண்ணின் திருமண வயது அடையாதவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது தெரிய வந்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago