ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் - 3,141 மையங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் : இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் 3,141 மையங்களில் 3.71 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செப்டம்பர் 12-ம் தேதி (இன்று) மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 985 மையங்களில் சுமார் 90 ஆயிரம் பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 630 மையங்களில் 60 ஆயிரம் பேருக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 522 மையங்களில் 70 ஆயிரம் பேருக்கும் என மொத்தம் 2,137 மையங்களில் 2.20 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது. சுகாதாரத் துறையினர், வருவாய், கல்வி, ஊரக வளர்ச்சி, அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப் பாளர்கள், காவல் துறையினர் என பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கரோனா தடுப்பூசி முகாமிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடை பெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா பேசும்போது, ‘‘சிறப்பு முகாம் நடைபெறும் முகாம்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். ஒவ்வொரு மையத்தி லும் போதுமான தடுப்பூசிகள் இருப்பு வைக்க வேண்டும். தடுப்பூசிசெலுத்தியவர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.

இது குறித்து வேலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பானுமதி கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் 985 மையங்களில் நாளை (இன்று) தடுப்பூசி முகாம் நடக்கிறது. காலை 7 மணிக்கு முகாம் தொடங்கும், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 90 ஆயிரம் இலக்கு நிர்ணியக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் மக்கள் வந்தாலும் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். போதுமான அளவுக்கு தடுப்பூசிகள் இருப்பு உள்ளது’’ என்றார்.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் நடை பெற உள்ள கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் குறித்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்துப் பேசும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (இன்று) நடைபெறவுள்ள கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் மூலமாக 1.51 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 1,004 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை முகாம் நடைபெறும்.

கிராம நிர்வாக அலுவலர்கள், மகளிர் குழுக்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய்த் துறையினர், நகர்புற அமைப்பு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் வீடு, வீடாக சென்று கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண் டும். வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் அளவில் ஒவ்வொரு 5 மையங்களுக்கும் ஒரு பொறுப்பு அலுவலர் என 1,004 மையங்களுக்கு 184 பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர். அரசு அலுவலர்கள் அனைவரும் களப்பணியில் ஈடுபட வேண்டும். அனைவரது ஒத் துழைப்பு இருந்தால் மட்டுமே, இப்பணியை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்” என்றார்.

பின்னர் அவர், செய்தியாளர் களிடம் கூறும்போது, “தி.மலை மாவட்டத்தில் நாளை (இன்று) 1,004 சிறப்பு மையங் களில் கரோனா தடுப்பூசி செலுத்தப் படவுள்ளது. 1.51 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தி.மலை மாவட்டத்தில் இதுவரை 82 ஆயிரம் பேர் 2-ம் கட்ட தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. 42 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துகுமாரசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) ரவி தேஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்