பொன்னேரி, திருநின்றவூர் பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம்உயர்த்துவது, பூந்தமல்லி நகராட்சியை விரிவாக்கம் செய்வது தொடர்பாக வரும் 13, 14 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது என, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 24-ம் தேதி நடைபெற்ற நகராட்சி நிர்வாகத் துறைமானியக் கோரிக்கை மீதானவிவாதத்தின்போது, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, திருநின்றவூர் பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்,பூந்தமல்லி நகராட்சி விரிவாக்கம் செய்யப்படும் என அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்படி, பொன்னேரி தேர்வு நிலை பேரூராட்சியுடன், அதன் அருகில் உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தடப்பெரும்பாக்கம், கொடூர் ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளது.
அதேபோல், திருநின்றவூர் சிறப்புநிலை பேரூராட்சியுடன், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நடுக்குத்தகை, நெமிலிச்சேரி ஆகிய ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட இருக்கிறது.
பூந்தமல்லி நகராட்சியுடன் காட்டுப்பாக்கம், சென்னீர்குப்பம், வரதராஜபுரம், நசரத்பேட்டை, அகரமேல், பாணவேடு தோட்டம், பாரிவாக்கம் ஆகிய 7 ஊராட்சிகளை இணைத்து விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
இதுதொடர்பாக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரமுகர்கள், குடியிருப்பு நலச்சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோரின் கருத்து கேட்புக் கூட்டம் வரும் 13-ம் தேதி மதியம் 3 மணியளவில் பொன்னேரி, மூகாம்பிகை நகர், ஆர்.ஆர்.திருமண மண்டபத்திலும், வரும் 14-ம் தேதி காலை 11 மணியளவில் திருநின்றவூர், சி.டி.எச்.சாலை, ராமகிருஷ்ணா திருமண மண்டபத்திலும், அன்று மதியம் 3 மணியளவில் பூந்தமல்லி, ராணி கல்யாண மண்டபத்திலும் நடைபெற உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago