திருவள்ளூர் மாவட்டத்தில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய 37 ஊராட்சிகளின் தலைவர்களை பாராட்டி, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு நாள்தோறும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இச்சிறப்பு முகாம்கள் மூலம்,மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சிஒன்றியங்களில், எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, கடம்பத்தூர், மீஞ்சூர், பூந்தமல்லி, பூண்டி, புழல், ஆர்.கே.பேட்டை, திருவள்ளூர், திருத்தணி, திருவாலங்காடு ஆகிய 11 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 37 ஊராட்சிகளில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
ஆகவே, அந்த ஊராட்சிகளின் தலைவர்களை பாராட்டி கவுரவிக்கும் விழா நேற்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில், 100 சதவீதம் கரோனா தடுப்பூசிகள் செலுத்திய37 ஊராட்சிகளின் தலைவர்கள்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கினார்.
வாகன விழிப்புணர்வு பேரணி
முன்னதாக, வருகிற 12-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ள தடுப்பூசி முகாம்களை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நேற்று மாவட்டத்தில் முதல் முறையாக 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய, பூண்டி அருகே உள்ள பேரிட்டிவாக்கம் ஊராட்சி முதல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை, சுமார் 24 கி.மீ.தூரத்துக்கு இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இப்பேரணியில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட காவல்கண்காணிப்பாளர் வருண் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியா தர்ஷிணி உள்ளிட்டோர் பங்கேற்று, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago