விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதியளிக்கக் கூடாது என 4 மாவட்ட காவல் கணிகாணிப்பாளர்களுக்கு தஞ்சாவூர் சரக காவல் துறை துணைத் தலைவர் பிரவேஷ்குமார் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் சரகத்துக்கு உட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகளை வைக்க காவல் கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கக் கூடாது.
மேலும், தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கவும், பொது இடங்களில் மக்கள் அதிகமாகக் கூடுவதைத் தவிர்க்கவும் விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் கொண்டாடுவது குறித்து சில நிபந்தனைகளை அரசு வழங்கியுள்ளது. அதன்படி, விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், பொது இடங்களில் விழா கொண்டாடவும் அனுமதி கிடையாது. சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதி கிடையாது. வீடுகளில் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாகச் சென்று சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதிக்கப்படுகிறது.
இந்த அனுமதி தனிநபர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்தச் செயல்பாடுகளில் அமைப்புகள் ஈடுபடுவது முழுவதும் தடை செய்யப்படுகிறது. இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago