வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் அருகே தமிழக- ஆந்திர எல்லையில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே மோர்தானா அணை கட்டப்பட்டுள்ளது.
11.50 மீட்டர் உயரத்துடன் கட்டப்பட்டுள்ள அணையில் 261.360 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். அணையில் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 6.75 மீட்டராக இருந்தது.
இதற்கிடையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து நீர்வரத்து காணப்பட்டதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 10.58 மீட்டராகவும் நீர் இருப்பு 233.843 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.
கடந்த 10 நாட்களில் சுமார் 12 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதேநேரம், அணைக்கான நீர்வரத்து குறைந்து நேற்று காலை நிலவரப்படி 60 கன அடியாக இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக மழை இல்லாததால் நீர்வரத்து குறைந்துள்ளது என கூறப்படுகிறது.
அணை முழு கொள்ளளவை எட்ட இன்னும் ஒரு மீட்டர் அளவே இருப்பதால் இந்த ஆண்டும் அணை முழுமையாக நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago