திருவாரூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர், பள்ளி மாணவர்கள் 3 பேர்,புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவர் ஒருவர் என 6 மாணவர்களுக்கு கரோனா தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த செப்.1-ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், கடந்த 5-ம் தேதியன்று பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் 3-ம் ஆண்டு மாணவர் ஒருவருக்கும், முதுநிலை பிரிவு மாணவர் ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது.
இதேபோல, ஏற்கெனவே தொற்று பாதிக்கப்பட்டிருந்த அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மேலும் இரு பிளஸ் 2 மாணவர்களுக்கும், தலைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலும் ஒரு பிளஸ் 2 மாணவருக்கும் கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு நேற்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. பள்ளி திறப்புக்குப் பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
7 ஆசிரியர்கள்
இதற்கிடையே, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான கணினி திறன் மேம்பாட்டு பயிற்சி கடந்த ஆக.23 முதல் ஆக.28 வரை நடைபெற்றபோது, எடமேலையூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்ற ஆசிரியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. தொடர்ந்து, அங்கு பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், மேலும் 7 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று இருப்பது சமீபத்தில் உறுதியானது. அவர்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு, அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago