உயர் மின்கோபுர திட்டத்தால் பாதிக்கப்படும் - விவசாயிகளுக்கு முழுஇழப்பீடு வழங்க கோரிக்கை :

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் உயர் மின்கோபுர திட்டங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உயர்மின் கோபுர திட்டங்களால் பாதிக்கப்படும் விவசாயிகள் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனமும், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும் திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் அவர்களது விளை நிலங்களில் 13-க்கும் மேற்பட்ட உயர்மின் கோபுர திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், விவசாய நிலங்கள் சந்தை மதிப்பை இழக்கின்றன. வாழ்வாதாரம் இழக்கும் விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீடு நிர்ணயித்து வழங்குவதில் வெளிப்படைத் தன்மை இல்லாமல், பாரபட்சமான நிலை உள்ளது. எனவே திட்டப் பணிகள் முடிந்துபோன நிலங்களுக்கும், பயிர்கள் மற்றும் மரங்களுக்கான இழப்பீட்டை அரசாணை எண்:54-ன்படி 10 மடங்கு வழங்க வேண்டும். திட்டப்பணிகள் நடைபெறும் நிலங்களில் அரசாணை எண்:54-ன்படி 10 மடங்கு இழப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்கிய பிறகுதான், பணியை தொடரவேண்டும்.

மேலும், 2013-ம் ஆண்டு புதிய நில எடுப்பு சட்டப்பிரிவு 30-ன் அடிப்படையில் நூறு சதவீதகருணைத் தொகை நிர்ணயித்து வழங்க வேண்டும். திட்டப் பாதையில் உள்ள துரவு கிணறு, ஆழ்துளைக் கிணறு, வீடுகள் உள்ளிட்ட நிரந்தர கட்டுமானங்களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும்.

வேலை செய்வதற்கான உரிமவிதியின்படி மாத வாடகை வழங்க வேண்டும். மின் தொடரமைப்புக் கழகம் அமைக்கத் திட்டமிட்டுள்ள விருதுநகர் - கோவை 765 கிலோவாட் உயர் அழுத்த மின் கோபுர திட்டத்தை விவசாய நிலங்களுக்குப் பாதிப்பு இல்லாமல், சாலையோரம் புதைவடமாக செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்