மலம்பட்டி சந்தையில் வாழைத்தார் திடீர் விலை உயர்வு : விவசாயிகள் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

சிவகங்கை அருகே மலம்பட்டி சந்தையில் வாழைத்தார் திடீர் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சிவகங்கை அருகே இடையமேலூர், கூட்டுறவுபட்டி, சிவல்பட்டி, மலம்பட்டி, கீழப்பூங்குடி, மேலப்பூங்குடி, மேலவலசை பல ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.

பூவன், நாடு, ஒட்டு, ரஸ்தாலி உள்ளிட்ட ரகங்கள் பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் வாழைத்தார், இலைக்கட்டுகள் மலம்பட்டி சந்தைக்கு விற்பனைக்கு வரும்.

மலம்பட்டி சந்தை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நடக்கும். இங்கு மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், திருச்சி, மேலூர், சிவகங்கை வியாபாரிகள் வாழைத்தார்களை வாங்கிச் செல்கின்றனர்.

கடந்த காலங்களில் கரோனா கட்டுப்பாடுகளால் சுப நிகழ்ச்சிகள், கோயில் விழாக்களுக்கு தடை இருந்தது. இதனால் வாழைத்தார்களை வாங்க ஆளின்றி மிகவும் குறைந்த விலைக்கே விற்பனை ஆனது. தற்போது படிப்படியாக தடை நீக்கப்பட்டு வருகிறது.

இதனால் நேற்று நடந்த சந்தையில் வாழைத்தார்கள் விலை உயர்ந்தது. கடந்த மாதம் ரூ.100 முதல் ரூ.150-க்கு விற்கப்பட்ட பூவன் வாழைத்தார் ரூ.500 முதல் ரூ.700-க்கும், ரூ.40 முதல் ரூ.100-க்கு விற்ற ஒட்டு ரகம் ரூ.200 முதல் ரூ.300-க்கும், ரூ.100-க்கு விற்ற ரஸ்தாலி ரூ.300 முதல் ரூ.400-க்கும் விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்