திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு வரை 23 விநாயகர் சிலை கிடங்குகளுக்கு வருவாய் மற்றும் காவல்துறையினர் ‘சீல்' வைத்துள்ளனர்.
தமிழக அரசு விதித்துள்ள தடை உத்தரவை மீறி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் என இந்து முன்னணியினர் அறிவித்துள்ளனர். இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக விநாயகர் சிலைகளை தயாரிப்பு கிடங்குகளுக்கு ‘சீல்' வைக்க ஆட்சியர் பா.முருகேஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி, உட்கோட்ட டிஎஸ்பிக்கள் தலைமையில், விநாயகர் சிலைகள் கிடங்கு களுக்கு ‘சீல்' வைக்கும் பணியில் கடந்த 2 நாட்களாக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தி.மலை, செங்கம், செய்யாறு, போளூர், கண்ண மங்கலம், ஆரணி, வந்தவாசி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்றிரவு வரை 23 விநாயகர் சிலைகள் கிடங்குகளுக்கு காவல்துறையினர் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினர் ‘சீல்' வைத்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 9 கிடங்குகளுக்கு ‘சீல்' வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிடங்கிலும் 10 முதல் 50-க்கும் அதிகமான விநாயகர் சிலைகள் உள்ளதால், அவற்றை விற்பனை செய்ய முடியாமல் சிலை வடிவமைப்பாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதித்துள்ளதால், விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தடையுள்ள நிலையில், நமது அண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் கர்நாடக மாநிலத்தில் கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, நாங்கள் தயாரித்து வைத்துள்ள விநாயகர் சிலைகளை, அனுமதி வழங்கப்பட்டுள்ள 2 மாநிலங்களுக்கு விற்பனை செய்ய தமிழக அரசும், மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago