கடும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிவதே நோக்கம் : விழாவில் திருப்பூர் ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிதல் மற்றும் வீட்டுத்தோட்டம் அமைப்பதை ஊக்குவித்தல் என்ற இரு உயரிய கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்வதே நோக்கம் என திருப்பூர் ஆட்சியர் சு.வினீத் தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் ‘போஷன் அபியான்’ திட்டத்தின் கீழ், தேசிய ஊட்டச்சத்து வாரவிழா கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா நேற்று தொடங்கியது. இதில் மாவட்ட ஆட்சியர் சு.வினீத் தலைமை வகித்து பேசும்போது ‘‘கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், பிறந்தது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் வளர் இளம்பெண்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்திட ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முழுவதும் ஊட்டச்சத்து மாதவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும், ஒரு சிறப்பு தலைப்பில் தேசிய ஊட்டசத்து மாதவிழா கொண்டாடப்படுகிறது. கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிதல் மற்றும் வீட்டுத் தோட்டம் அமைப்பதை ஊக்குவித்தல் என்ற இரு உயரிய கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்வதே இந்தாண்டின் தேசிய ஊட்டச்சத்து மாதத்தின் முக்கிய நோக்கம். இதில் 10,407 கர்ப்பிணிகளும், 8,972 பாலூட்டும் தாய்மார்களும், ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 715 குழந்தைகளும், பொதுமக்களும் பயன்பெறுவர்’’ என்றார்.

இதில் கலைநிகழ்ச்சிகளுடன், பாரம்பரிய சிறுதானியங்கள் கொண்டு 50 உணவு வகைகள், அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும். இணை உணவு மாவு கொண்டு செய்யப்பட்ட 50 உணவு வகைகள் என மொத்தம் 100 உணவு வகைகள் கொண்ட பாரம்பரிய உணவுத்திருவிழா மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

பாரம்பரிய உணவு வகைகளுக்கான செயல்முறை கையேடு மற்றும் ஊட்டச்சத்து நிலைக்கு வாழ்க்கை சுழற்சி அணுகுமுறை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்