திருப்பூர் மாநகராட்சி 37-வது வார்டு ராயபுரம் அருகே அணைக்காடு பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் வசிக்கும் நிலம், தனிநபர் ஒருவருக்கு சொந்தமானது எனவும், கடந்த 2019-ம் ஆண்டு குடியிருப்பு நிலத்தை அளவீடு செய்து தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வருவாய் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2 ஆண்டுகளாக அளவீடு செய்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்றும் அளவீடு செய்ய வந்த வருவாய் துறையினருக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, திருப்பூர் டவுன்ஹால் பகுதியில் சாலை மறியல் போராட்டத்திலும் மக்கள் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது ‘‘நாங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். வருவாய் துறையினர் இடத்தை அளவீடு செய்து தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவில் உள்ளனர். 2010-ம் ஆண்டில் மின்வசதி கேட்டு விண்ணப்பித்தபோது, 40 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருவதால் மின் இணைப்பு வழங்க எந்த ஆட்சேபனையும் இல்லை என அப்போதைய கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். இதை நீதிமன்றத்தில் வருவாய் துறை அதிகாரிகள் மறைத்துள்ளனர்’’ என்றனர்.
முன்னதாக மறியலின்போது காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை திருப்பூர் வடக்கு போலீஸார் கைது செய்தனர். சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகளை காரணம்காட்டி அளவீட்டு பணிகள் ஒவ்வொரு முறையும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, காலி நிலத்தை அளந்து தனியாருக்கு வருவாய் துறையினர் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வேலி அமைக்கும் பணிகள் தொடங்கின.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago