மலைக் கிராம மாணவர்களுக்கு நல்ல கல்வி வழங்க வேண்டும் : ஆசிரியர் தின விழாவில் கிருஷ்ணகிரி ஆட்சியர் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

நகரப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு இணையாக மலை பகுதியில் உள்ள மாணவர்களுக்கு நல்ல கல்வியை பயிற்றுவிக்க வேண்டும். என ஆசிரியர் தின விழாவில் கிருஷ்ணகிரி ஆட்சியர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் சிறப்பாக பணிபுரிந்த 10 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதை வழங்கி ஆட்சியர் ஜெய சந்திர பானு ரெட்டி பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருபக்கம் தொழிற்சாலைகள் நிறைந்தும் ஒரு புறம் மலைபிரதேச மாகவும், ஒருபுறம் விவசாய நிலங்களாகவும் உள்ளது. இன்று மாவட்ட ஆட்சியராக உள்ள நான் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் எனது தொடக்க கல்வியை மலைபிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தான் தொடங்கினேன். அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆசிரியர்கள் எனக்கு கல்வி கற்றுக்கொடுத்ததால் உங்களுக்கு விருது வழங்கும் நிலையில் உள்ளேன்.

எனவே, மலைப் பகுதியில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்கவும், தொடர்ந்து மாணவர்கள் கல்வி பயிலும் வாய்ப்பை உருவாக்கிட வேண்டும். மாணவ மாணவியர்கள் போதிய கல்வி கற்பதன் மூலம் இளம் வயது திருமணம், முற்றிலும் தடுக்க முடியும்.

சாலை, போக்குவரத்து, தங்கும் வசதி இல்லாத மலைக் கிராமங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், நகரப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு இணையாக மலைப் பகுதியில் உள்ள மாணவர் களுக்கு நல்ல கல்வியை பயிற்றுவிக்க வேண்டும். அவர்கள் நல்ல முறையில் படித்து அரசுப் போட்டி தேர்வுகளில் கலந்துக்கொள்ளும் வகையில் தயார்படுத்த வேண்டும்.

இவ்வாறு ஆட்சியர் பேசினார்.

இந்நிகழ்வில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முருகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிசந்திரா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரபாகர், வட்டாட்சியர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தருமபுரியில் 9 ஆசிரியர்களுக்கு விருது

தருமபுரி ஆட்சியர் அலுவல கத்தில் ஆசிரியர் தின விழா நடந்தது. நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் வ.செந்தில்செல்வம், இரா.சிவமூர்த்தி, அ.சர்மிளா பேகம், ம.வெ.வாசுதேவன், கு.முருகன், கு.சரவணன், இரா.சுப்பிரமணியன், கோ.அமுதா, சு.கவிதா ஆகியோருக்கு நல்லாசிரியர் விருதை ஆட்சியர் திவ்யதர்சினி வழங்கினார்.

பின்னர் அவர் பேசும்போது, “ஆசிரியர் சமூகம் தங்களின் இந்த அரும்பணியை அறம் தவறாமல் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்” என்றார்.நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஹேமலதா, மாவட்ட கல்வி அலுவலர்கள் பாலசுப்பிரமணி(தருமபுரி), பொன்முடி(அரூர்), சண்முக வேல்(பாலக்கோடு) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்