பெரியசாக்னாவூர்- ஏக்கல்நத்தம் இடையே - உயர்மட்ட பாலம் அமைக்க மலைக் கிராம மக்கள் வலியுறுத்தல் : சிறுபாலத்தில் மழைநீர் தேங்குவதால் சிரமம்

By எஸ்.கே.ரமேஷ்

ஏக்கல்நத்தம் மலைக் கிராமத் துக்கு செல்லும் சாலையில் அமைக்கப்பட்ட சிறுபாலத்தில் மழைநீர் தேங்குவதால், கிராம மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, 3 இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என மலைக் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த நாரலப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மலைக் கிராமம் ஏக்கல்நத்தம். இக்கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கை ஏற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரூ.2.50 கோடி மதிப்பில் மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதி மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சி நிதியில் இருந்து தார் சாலை அமைக்கப்பட்டது.

பயனில்லாத சிறுபாலம்

சாலையில் மலையேற்ற பகுதிகளில் மழைநீர் சாலைகளை அரிக்காத வண்ணம் 254 மீட்டர் தூரம் சிமென்ட் தடுப்பு சுவர் அமைத்துள்ளனர்.

இதேபோல, இரு இடங்களில் மழை நீர் செல்லும் பாதையின் குறுக்கே சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் மழைநீர் செல்லும் இடங்களில் உரிய திட்டமிடல் இல்லாததால், தற்போது மலைக் கிராமத்துக்கு செல்லும் சாலையின் 3 இடங்களில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் மக்களும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

தண்ணீர் தேங்கும் அவலம்

இதுதொடர்பாக ஏக்கல்நத்தம் மலைக் கிராம மக்கள் கூரியதாவது:

மலையின் மீது கெண்டிகன் ஏரி உள்ளது. ஏரி நிரம்பி வெளியேறும் தண்ணீர் மற்றும் வனப்பகுதியில் இருந்து வரும் தண்ணீரும் ஒன்றிணைந்து நாரல்பள்ளி ஏரிக்கு செல்கிறது.இக்கால்வாயின் குறுக்கே சிறு தடுப்பணைகளும் கட்டியுள்ளனர். தற்போது, பெய்த தொடர் மழைக்கு ஏரி நிரம்பி அதிகளவில் தண்ணீர் கால்வாயில் செல்கிறது. மேலும், தடுப்பணையும் நிரம்பியதால், சாலையில் பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

குறிப்பாக தார் சாலை பணிகள் நடைபெறும்போது, மழைநீர் செல்லும் வகையில் சிறுபாலம் அமைப்பதை தவிர்த்து உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், சாலையின் 3 இடங்களில் 3 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது.

உயரத்தை குறைக்க வேண்டும்

மேலும், மலையேற்ற பகுதியிலும் உயரத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினோம். அதுவும் செய்யவில்லை. இதனால், மலையில் இருந்து கீழே இறங்குபவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர்.

பெரியசாக்னாவூரில் இருந்து ஏக்கல்நத்தம் மலைக்கு செல்லும் சாலை அதிகளவில் தண்ணீர் தேங்கும் இடத்தில் உயர்மட்ட பாலம் மற்றும் பிற இடங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் சிறுபாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்