சேதுபாவாசத்திரம் மீன்பிடி இறங்குதளத்தில் - தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்திய 4 விசைப்படகுகள் பறிமுதல் :

சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில், அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்திய 4 விசைப் படகுகளை மீன்வளத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி விசைப் படகு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்வதாகக் கூறி, விசைப் படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்களிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டது. இதை தடுக்கும் விதமாக, மீன்வளத் துறையினர் மீன்பிடி துறைமுகங்களில் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சேதுபாவாசத்திரம் மீனவர்கள் அரசினால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டிருப்பதாக நேற்று முன்தினம் வரப்பெற்ற புகாரைத் தொடர்ந்து, சேதுபாவாசத்திரம் மீன்பிடி இறங்குதளத்தில் விசைப் படகுகளை மீன்வளத் துறை உதவி இயக்குநர் சிவக்குமார் தலைமையில், மீன்வளத் துறை ஆய்வாளர்கள் கெங்கேஸ்வரி, ஆனந்த், மேற்பார்வையாளர்கள் சண்முகசுந்தரம், சுரேஷ், சார் ஆய்வாளர் நவநீதன், கடல் சட்ட அமலாக்கப் பிரிவு காவலர் ராஜா, கடலோரப் பாதுகாப்பு குழும காவலர் பழனிவேல் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதில் ராமன், பாலகிருஷ்ணன், காளிமுத்து, முருகன் ஆகியோருக்கு சொந்தமான 4 விசைப் படகுகளில் தடைசெய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 4 விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து மீன்வளத் துறை உதவி இயக்குநர் சிவக்குமார் கூறும்போது, ‘‘தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்திய 4 விசைப் படகுகள் உரிமையாளர்கள் மீதும் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 4 விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வழக்குகள் முடியும் வரை 4 விசைப் படகுகளும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல அனுமதி வழங்கப்படாது, படகுக்கான டீசலும் வழங்கப்படாது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE