கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் கூட்டுக்கமிட்டி கூட்டம், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்று நடைபெற்றது. பல்லடம் விசைத்தறியாளர்கள் தலைவர் இரா.வேலுச்சாமி தலைமை வகித்தார். சோமனூர் விசைத்தறியாளர்கள் தலைவர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார்.
கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களுக்கான கூலி உயர்வு தொடர்பாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர்கள் முன்னிலையில், ஆறுகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதில் ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பு கலந்து கொள்ளவில்லை. எனவே, ஜவுளி உற்பத்தியாளர்களின் இந்த நடவடிக்கையை கூட்டுக்கமிட்டி கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
அடுத்து நடைபெறவுள்ள கூலிஉயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்து கொள்ளவேண்டும். கடந்த 7 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள நியாயமான கூலி உயர்வை வழங்கி, விசைத்தறித் தொழிலையும், தொழில் சார்ந்த லட்சம் குடும்பங்களையும் காப்பாற்ற வேண்டும்.
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கூலி உயர்வு கோரி நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தவும், இரு மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் பேசி தீர்வு காணவும் முதல்வர் நடவடிக்கைஎடுக்க வேண்டும். விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்களை உடனடியாக அழைத்துப்பேசி நியாயமான கூலி உயர்வினை,சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் அறிவிக்கும் வகையில் கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செப்டம்பர் 6-ம் தேதி (இன்று) கோவை தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையரை இரு மாவட்ட கூட்டுக் கமிட்டி நிர்வாகிகள் நேரில்சந்தித்து கூலிஉயர்வு குறித்து முறையிட வேண்டும். கூலி உயர்வு விவகாரத்தில் மேலும் காலம் தாழ்த்தினால், இரு மாவட்டங்களில் உள்ள 2 லட்சம் விசைத்தறிகளை நிறுத்தி, வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவோம் என்பன உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago